சென்னை:

 

ஜினிகாந்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் பாஜகவின் சுப்பிரமணிய சாமி மீது அக் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகவலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

 

நடிகர் ரஜினிகாந்த் நேரடி அரசியலில் நுழைவார் என்றும் தனி கட்சி துவக்குவார் என்றும் அவ்வப்போது பரபரப்பு எழுவது போல தற்போதும் எழுந்துள்ளது. சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்துப் பேசிய ரஜினி, அரசியல் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பலவித யூகங்களை எழுப்பி உள்ளது.

 

ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்றும், வரவேண்டும் என்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார் பாஜகவின் சுப்பிரமணிய சாமி.

 

கடந்த மே மாதம் ஆங்கில சேனல் ஒன்றில் பேசிய சுப்பிரமணிய சாமி, “ரஜினிக்கு தெளிவான கொள்கை கிடையாது. அவர் தமிழரே இல்லை. அவர் அரசியலுக்கு வரக்கூடாது” என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவரது பேச்சு ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில் மீண்டும், “அரசியலுக்கு வர ரஜினிகாந்த்துக்கு தகுதி இல்லை” என்று  பாஜகவின் சுப்பிரமணிய சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ”ரஜினிகாந்த் கொஞ்சம் கூட கல்வியறவு இல்லாதவர்” என்றும் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுவும் ரஜினி ரசிகர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூகவலைதளங்களில் சுப்பிரமணியை சாமியை கடுமையாக விமர்சித்து அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள். அதோடு, சுப்பிரமணிய சாமி மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் பதிவிட்டு வருகிறார்கள்.

 

ஒருபுறம் பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் பலர், ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அதுவும் பாஜகவில் சேர வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அதே கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய சாமியின் கருத்து எதிர்த்திசையில் இருப்பது வழக்கம்போல பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுவாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைமையை ரஜினி ரசிகர்கள் பலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.