சென்னை: பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றமற்றவர் என விரைவில் நிரூபித்து விடுவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

ஆவின் முறைகேடு,  திருப்பதிக்கு நெய் வழங்கியதில் முறைகே? அரசு வேலை வாங்கி தருவதாக முறைகேடு உள்பட ஏராளமான முறைகேடு வழக்குகளில்  முன்னாள் அமைச்சர்  ராஜேந்திரபாலாஜி சிக்கியுள்ளார். அவரை கைது செய்ய காவல்துறையினர் 8 தனிப்படைகளை அமைத்து தேடி வருகின்றனர். ஆனால், அவர்களிடம் சிக்காமல்  ராஜேந்திர பாலாஜி கடந்த இரு வாரமாக தலைமறைவாக இருந்து வருகிறார்.

இதையடுத்து, அவரது உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான பல அதிமுகவினரை காவல்துறையினர், கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஊழல் குற்றவாளியான ராஜேந்திரபாலாஜிக்கு ஆதரவாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் வக்காலத்தி வாங்கி உள்ளார்.

ஏற்கனவே ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் பரவிய நிலையில், ராஜேந்திர பாலாஜி குற்றமற்றவர் என விரைவில் நிரூபித்து விடுவார் என தெரிவித்து உள்ளார்.

ராஜேந்திரபாலாஜி மீதான குற்றச்சாட்டுக்களின்படி, அவர் சிறைசெல்வது உறுதியாகி உள்ள நிலையில், ஐபிஎஸ் அதிகாரியான  அண்ணாமலை, தலைமறைவாக உள்ள அவரை சரண்டர் ஆகி விசாரணையை சந்திக்க கூறாமல், அவர் குற்றச்சாட்டில் இருந்து மீண்டு குற்றமற்றவர் என நிரூபிப்பார் என கூறியுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது,.