டெல்லி: வரும் 22ந்தேதி முதல் 25 தேதிவரை சென்னையில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில், தான் சென்னை செல்வதற்கு அனுமதி வழங்க கோரி முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக ஆட்சியின்போது, ஆவின் நிறுவனங்களில் பணி வழங்குவதாக கூறி 3 கோடி ரூபாய் முறைகேடு செய்தது உள்பட பல வழக்குகளில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்குகளில், உச்சநீதிமன்றம் அவருக்கு கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி நிபந்தனை ஜாமின் வழங்கியது. அப்போது, ராஜேந்திர பாலாஜி, வழக்கு விசாரணை நடைபெறும் காவல் எல்லைக்கு வெளியே செல்லக்கூடாது, தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், வரும் 22ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரை சென்னையில் அதிமுக பொதுக்குழு செயற்குழு நடைபெறவுள்ளதால், அதில் கலந்து கொள்வதற்கு தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் தான் உள்ளதால், தனக்கு ஜூன் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாகவும் இதில் கலந்து கொள்வதற்காக குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு தனக்கு அனுமதி வழங்க வேண்டுமென ராஜேந்திர பாலாஜி கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் ராஜேந்திரபாலாஜி தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஓரிரு நாளில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.