தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி “பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதன்முதலில் எடப்பாடி அரசுதான் கொண்டு வந்தது” என்று பேசினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தமிழ்நாடு அரசு இதற்கு முன்பு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தவில்லை. பெங்களூரைச் சேர்ந்த ‘அட்சய பாத்திரா’ எனும் என்.ஜி.ஓ சென்னை மாநகராட்சியில் சில இடங்களில் செய்த தொண்டு பணியை உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி தாங்கள் செய்ததாக குறிப்பிடுகிறார்.

 

அரசிடம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பல்வேறு NGO கள் அனுமதி கோரும். நல்ல திட்டங்களுக்கு அந்த தொண்டு நிறுவனத்தின் சொந்த நிதி ஆதாரத்தைக் கொண்டு செயல்படுத்த அரசும் அதை அனுமதிக்கும் என விளக்கினார்.

 

இதுகுறித்து அதிமுக – திமுக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து குறுக்கிட்ட நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

“அட்சயபாத்திரா” எனும் தொண்டு நிறுவனம் மூலம் மிகப் பெரிய தில்லாலங்கடி வேலை நடந்திருப்பதை சட்டப்பேரவையில் விளக்கினார்.

இதுகுறித்து நிதி அமைச்சர் பேசியதாவது, “ஒவ்வொரு ஆண்டும் தமிழக கவர்னருக்கு வழங்கப்பட்டு வந்த விருப்ப நிதியை (discretionary fund) ரூ. 50 லட்சத்தில் இருந்து 10 மடங்கு உயர்த்தி ரூ. 5 கோடியாக வழங்க கடந்த அதிமுக ஆட்சியில் உத்தரவிடப்பட்டது.

அதே காலக்கட்டத்தில் அட்சய பாத்திரா தொண்டு நிறுவனம், தாங்கள் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்க விரும்புவதாகவும், அதற்கு அனுமதியும், உணவு சமைக்க இடமும் கேட்டு விண்ணப்பிக்கின்றனர்.

கிரீம்ஸ் சாலை மற்றும் பெரம்பூர் பாரக்ஸ் சாலை என மாநகரின் மையப் பகுதியில் இரண்டு இடத்தில் அதற்கு இடமளித்து பெரிய உணவுக் கூடமும் கட்டித் தந்தது சென்னை மாநகராட்சி.

இதனைத் தொடர்ந்து, ஆளுநர் தனது விருப்பத்திற்கு செலவு செய்ய அனுமதிக்கப்பட்ட விருப்ப நிதியில் இருந்து ரூ. 2 கோடியை இரண்டு முறை மொத்தம் நான்கு கோடி ரூபாயை அட்சய பாத்திரா நிறுவனத்துக்கு நன்கொடையாக தருகிறார்.

அதுபோக அந்த 5 கோடி நிதியில் மீதமுள்ள பணம் வேறு செலவினங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு அட்சய பாத்திரா நிறுவனத்துக்கு மேலும் ஒரு கோடி ரூபாயை விருப்ப நிதியில் இருந்து ஆளுநர் மாளிகை வழங்கி உள்ளது” என்று குறிப்பிட்டார்.

ஆளுநர் மாளிகைக்கு அதிமுக அரசு வழங்கிய நிதி வேறு வகையில் சுழற்சி முறையில் அரசு சாரா அமைப்பிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டு அட்சய பாத்திரா காலை உணவுத் திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டதாக புள்ளிவிவரங்களுடன் நிதி அமைச்சர் சட்டசபையில் விளக்கினார்.

நம்ம வீட்டு தேங்காயையே எடுத்து அந்த நிறுவனம் அதன் பேரில் நம்ம வீட்டு பிள்ளைகளுக்கு உடைக்கிறது. அதுவும் வெங்காயம், பூண்டு சேர்க்காத உணவாக வழங்கியதாக வெளியான புள்ளிவிவரத்தை அடுத்து அதிமுக உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.