தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ரூ.294 ஆக வழங்கப்படும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அறிவித்துள்ளார்.

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தமிழக சட்டப்பேரவையில் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஊதியம் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரூ.281-ல் இருந்து ரூ.294-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றார்.

ஊரக பகுதிகளில் பணிபுரியும் 66,130 தூய்மை காவலர்களின் மதிப்பூதியம் உயர்த்தப்படும். தூய்மை காவலர்களின் மதிப்பூதியம் ரூ.3,000 ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் இதற்காக ரூ. 112 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் ரூ. 154 கோடியில் 2,043 புதிய சத்துணவு கூடங்கள் கட்டப்படும்.

10.50 லட்சம் மகளிர் குழுக்களுக்கு ரூ. 134 கோடி மதிப்பில் முருங்கை கன்றுகள் வழங்கப்படும்.

விளிம்புநிலை மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் ரூ. 1500 கோடி மதிப்பில் குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

2,500 ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளை சீரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து பணி நிறைவு பெற்றதாக கூறிய அமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றுச்சுவர் கட்டப்படும் என்று தெரிவித்தார்.

இதுபோன்று, 149 சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ.190 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிவடைந்துள்ளன என்றும் தெரிவித்தார்.

மேலும், நமக்கு நாமே திட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.