கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, ராதாரவி, யோகி பாபு, சதீஷ், விஜயகுமார், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராஜவம்சம்’. சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் .

இந்தப் படத்தில் சசிகுமார், சதீஷ் உள்ளிட்டோர் நடனமாடும் பாடல் ஒன்று உள்ளது. இதில் சதீஷ் பாடும் வரிகளை, அவரை வைத்தே பாட வைத்துள்ளார் சாம் சி.எஸ். இதனால் இந்தப் படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகிறார் சதீஷ்.

49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக தயாராகிறது. இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் T.D.ராஜா தயாரித்துள்ளார்.

இப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் குழு. கடந்த மார்ச் மாதமே ரிலீசாக இருந்த இப்படம் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 1-ந் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.