ஜெய்பூர்:
ராஜஸ்தானில் பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுடன் அம்மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் சிரித்த முகத்துடன் செல்பி எடுத்துக் கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
செல்பி மோகம் எங்கெங்கும் தலைவிரித்து ஆடுகிறது. கட்டிடத்தின் உச்சியில் செல்பி எடுக்கிறேன் என்று விழுந்து இறந்தவர்கள் உண்டு. துக்க வீட்டில் பிணத்துடன் செல்பி எடுத்து சமூகவலைதங்களில் மகிழ்ச்சியுடன் பதிவிடுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
அதே போல் இன்னொரு சம்பவம்.
ராஜஸ்தானில் உள்ள அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஜெய்ப்பூர் வடக்குப் பகுதியில் உள்ள மகிளா காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தார். இந்த பெண், வர். வரதட்சணையாக 51 ஆயிரம் வழங்காததால் தனது கணவர் மற்றும் இரு சகோதரர்களால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் போலீசில் புகார் அளித்தார். அத்துடன் அப்பெண்ணின் நெற்றியிலும் கையிலும் கணவர் குடும்பத்தார் ‘வரதட்சணை தராததவர்’ என பச்சை குத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை சந்திக்க, ராஜஸ்தான் மகளிர் ஆணைய தலைவர் சுமன் ஷர்மா மற்றும் உறுப்பினர் குர்ஜார் ஆகியோர் அங்கு வந்தார்கள்.
அந்த பெண்ணிடம் சுமன் விசாரித்துக் கொண்டிருந்த போது, அருகில் இருந்த குர்ஜார், அந்த பெண்ணுடன் தனது செல்போனில் செல்பிக்களை எடுத்துள்ளார். அதுவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அருகில் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்திருக்கிறார்.
இதை அங்கிருந்த வேறு ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டார். “பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்டிருக்கிறார் குர்ஜார்” என்று பலரும் விமர்சித்தார்கள்.
இதையடுத்து மகளிர் ஆணைய தலைவி சுமன், “பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுடன் நான் பேசிக்கொண்டிருந்த போது ஆணைய உறுப்பினர் குர்ஜா செல்பிக்களை எடுத்திருக்கிறார். அதை நான் கவனிக்கவில்லை. இது போன்ற செயல்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு நான் அவரை கேட்டுக்கொண்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.
தற்போது குர்ஜார் மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
அதே நேரம், “குர்ஜார் செல்பி எடுத்தது மகளிர் ஆணைய தலைவி சுமனd ஷர்மாவுக்கு நன்றாகவே தெரியும். செல்பிக்கு எடுக்கும்போது அவர் போஸ் கொடுப்பது நன்றாகவே தெரிகிறது. அவரும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பலரும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.