லக்னோ:

லோக்சபா தேர்தல் முன்கூட்டியே வர வாய்ப்பு இருப்பதால் பாஜக தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று ராஜஸ்தான் கவர்னர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில கவர்னரும், உ.பி. மாநில முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங் லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘எந்த கட்சியும் பிற்படுத்தப்பட்ட மக்களையும், தலித்களையும் புறம் தள்ளிவிடமுடியாது. இதை அவர்கள் செய்தால் அக்கட்சிகளை மக்கள் புறக்கணித்து விடுவார்கள். அனைத்து பாஜக தொண்டர்களும் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்’’ என்றார்.

16வது லோக்சபாவின் பதவி காலம் 2019 மே மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும் சமயத்தில் லோக்சபா தேர்தலையும் சேர்த்து நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு ஏற்ப பட்ஜெட் கூட்ட தொடரின் போது இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந், ஒரே நேரத்தில் சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோல் பிரதமர் மோடியும் ஒரு நாடு, ஒரு தேர்தல் என்ற கோஷத்தை எழுப்பி வருகிறார்.

லோக்சபா தேர்தலை முன்கூட்டியே சந்திக்க எதிர்கட்சிகளும் தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளது. ராஜ்யசபா எதிர்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் கடந்த மாதம் கட்சியினர் மத்தியில் பேசுகையில், ‘‘வரும் நவம்பருக்குள் லோக்சபா தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு 90 சதவீதம் இருக்கிறது. காங்கிரஸ் வெற்றிக்கு பல ஆண்டுகளாக உழைத்த தொண்டர்கள் இத்தேர்தல் வெற்றிக்கும் பாடுபட வேண்டும்’’ என்றார்.