சென்னை:

திருமழிசை காய்கறி மார்க்கெட்டில் சமீபத்தில் செய்த மழை காரணமாக, மழைநீர் தேக்கம் அடைந்து சேறும், சகதியுமாக மாறியதால், வியாபாரிகள் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி என்று நேரில் ஆய்வு செய்து, தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியதால் கோயம்பேடு  மார்க்கெட் மே, 5ந்தேதி மூடப்பட்டது.  அதற்கு பதிலாக,  திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில், 200 கடைகளுடன் தற்காலிக காய்கறி மார்க்கெட், மே, 11ல் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அந்த பகுதியில்  இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால்,  அந்த பகுதி முழுவதும்  மழைநீர் தேங்கி குளம் போன்று காட்சியளிக்கிறது. இதனால் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து, வியாபாரிகள் தரப்பில் சி.எம்.டி.ஏ., அதிகாரிகளிடம்  புகார் கூறப்பட்டதாகவும், ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்கான அறிகுறி தெரியவில்லை. இது தொடர்ந்தால், கடையை காலி செய்துவிட்டு வெளியேறும் நிலை உருவாகும் என்று அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில்,  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி இன்று மாலை திருமழிசை சந்தைக்கு நேரில் ஆய்வு  நடத்தினார். அதைத்தொடர்ந்து, அங்கு  தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.