சென்னை:
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் நள்ளிரவு இரவு 12 மணி அளவில், அண்ணாநகர், வடபழனி, ஆலந்தூர், போரூர், அம்பத்தூர், மூலக்கடை, கொடுங்கையூர் ரெட்ஹில்ஸ் உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது. நள்ளிரவு முதல் தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் திருநின்றவூர், பூவிருந்தவல்லி, ஆவடி, பட்டாபிராம், செம்பரம்பாக்கம் பகுதிகளிலும் மழை கொட்டியது. சென்னையின் ராயப்பேட்டை, கொளத்தூர், ஆதம்பாக்கம், கோட்டூர்புரம், மயிலாப்பூர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், ராமாபுரம், வளசரவாக்கம், சைதாப்பேட்டை, நந்தனம், அனகாபுத்தூர், சூளைமேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. சைதாப்பேட்டை, சின்னமலை,கிண்டி, அண்ணா பல்கலைக்கழகம், அம்பத்தூர், வேளச்சேரி, கோயம் பேடு பகுதிளிலும் காற்றுடன் நல்ல மழை பெய்தது.
கொரோனா கொடுமை, கடும் வெப்பம் காரணமாக துவண்டு கிடந்த சென்னை மக்களுக்கு இந்த மழை ஓரளவு ஆறுதல கொடுத்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கோவை, தருமபுரி, சேலம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங் களிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 லிருந்து 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் மழை பெய்து வருகிறது.