சென்னை
கடலூர், அரியலூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

கடந்த ஒரு வாரமாகக் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விழுப்புரம் மாவட்டம், கோலியனூர், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, பிடாகம் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஒரு சில இடங்களில் காற்று, இடி மின்னலுடன் பெய்த மழையால் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. இதைப் போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, அன்னவாசல், சித்தன்னவாசல், கீரனூர், திருவரங்குளம், ஆலங்குடி, கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழை காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. மழைபெய்யும்போது எல்லாம் இதுபோன்ற பிரச்சினைகளைச் சந்திப்பதாகவும், இதற்குச் சரியான தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கோட்டையன் நகர் பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அரியலூர் மாவட்டத்திலும் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இன்றும் மழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.