சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் இந்த வாரத்துக்கான மழை பற்றிய அறிவிப்பை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதியாக மாறி உள்ள நிலையில், அது காற்றழுத்த தாழ்வு மண்டமாக மாறும் என்றும், இதனால் அடுத்த சில நாட்கள் கடற்கரையோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இந்த வாரம் எந்தெந்த பகுதிகளில் கனமழை இருக்கும் என்பது குறித்த  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் மேற்கு பகுதி உக்கிரமாக தெரிகிறது. அவை வட தமிழக கடற்கரைக்கு வந்தால் பரவலாக கனமழை பெய்யக்கூடும். இல்லையெனில் விட்டு விட்டு மழை பெய்யும். மேகக்கூட்டம் அருகில் வரும்போதுதான் சொல்ல முடியும்.‘

இன்று நவம்பர் 19ஆம் தேதியும், நாளை நவம்பர் 20ஆம் தேதியும் மழை இருக்காது. நாளை மறுநாள் நவம்பர் 21 திங்கள் கிழமை முதல் மழையின் ஆட்டம் ஆரம்பிக்கும். 20ஆம் தேதி மழை இருக்காது என்றும் 21ஆம் தேதியிலிருந்து எதிர்பார்க்கலாம். இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழக கடற்கரைப் பகுதிகளில் 3முதல் நான்கு நாள்கள் இருக்கும். 21ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதி வரை நான்கு நாள்கள் இந்த பகுதிகளில் மழை இருக்கும். அவ்வப்போது சென்னை உட்பட வட தமிழக கடலோர மாவட்டங்களில் மழை இருந்துகொண்டே இருக்கும்.

தென்தமிழகத்தில் 25ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை மழை பெய்யும். வட உள் தமிழகம் மற்றும் பெங்களூர் பகுதிகளில் 22ஆம் தேதியும், 23ஆம் தேதியும் மழையை எதிர்பார்க்கலாம். கொங்கு மண்டலத்தில் 23, 24ஆம் தேதிகளில் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.