சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால்,பள்ளிக்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்லும் ஊழியர்கள் கடும் அவதி அடைந்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிது முதல் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த இரு வாரங்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஏரி குளங்கள் நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதையடுத்து, கடந்த ஒருசில நாட்களாக மழை குறைந்து மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்ட நிலையில், இன்று காலை 6மணி முதல் விட்டு விட்டுத் தூறத்தொடங்கிய மழை சுமார் 8 மணிக்கு மேல் கனமழையாக பெய்யத் தொடங்கி உள்ளது. இதனால் சென்னையின் பல இடங்களில், மழை நீர் சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கி வருகிறது.
மாதவரம் பெரம்பூர், கோயம்பேடு, கிண்டி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இன்று காலை திடீரென மழை பெய்யத்தொடங்கியதால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணாக்கர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லுபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.