புதுடெல்லி:
காற்று மாசு காரணமாக டெல்லி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும், ஆன்லைன் வாயிலாக, வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாகக் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது. காற்று மாசை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் முழுவதுமாக புகைமூட்டம் நிலவுகிறது. இந்நிலையில் டெல்லியில் காற்று மாசின் அளவு மிகவும் அதிகரித்துள்ளதால் வீட்டை விட்டு வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், காற்று மாசு காரணமாக டெல்லி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும், ஆன்லைன் வாயிலாக, வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து டெல்லி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் காற்றின் தரம் சீரடையாததால் பள்ளிகள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்  என்றும்,  டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மறு உத்தரவு வரும் வரை நேரடி வகுப்புகள் கிடையாது என்றும்  ஆன்லைன் வாயிலாக, வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேவைப்பட்டால், காற்று மாசை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளுங்கள் என, டெல்லி அரசுக்கு உத்தரவிட்டது. இதை அடுத்து, டெல்லியில் உள்ள பள்ளிகள் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாகவும், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரிவில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்றும், கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்தும் டெல்லி அரசு உத்தவிட்டது. மேலும் முழு ஊரடங்கை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.