சென்னை

மிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மழை சிறப்பாக பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறி உள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் அளிக்கும் தகவலுக்கு இணையாக தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பீட்டர் ஜான் தகவலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். அவருடைய சீதோஷ்ண கணிப்புக்கள் அனைத்தும் துல்லியமாக உள்ளதால் மக்கள் அவர் கருத்துக்கு நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர். இன்று முகநூலில் அவர் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், “வங்கக் கடலின் வடபகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாவதற்கு முன்பு, தமிழகத்துக்கு அடுத்து வரும் 2 நாட்களும் வெப்பச் சலனத்தால் மழை பெய்யும் சிறப்பான நாட்களாகவே தென்படுகிறது. அடுத்த இரண்டு நாட்களும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இரவில் மழை பெய்யும் நாட்களாக அமைந்துள்ளது.

வங்கக் கடலின் வட பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் வரைதான், நமது மாவட்டங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். தற்போது தென்மேற்குப் பருவ மழை கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. அடுத்து வரும் இரண்டு நாட்களும், கடற்காற்று தரைப்பகுதிக்கு வந்து, அங்கு வெப்பச் சலனமாக மாறி மழையைத் தருவதற்கான சாதகமான சூழல் உள்ளது.

ஆனால், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகிவிட்டால், கடற்காற்று அதன் போக்கில் தான் நகரும். குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை குஜராத் அல்லது பாகிஸ்தான் நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் மழைக்கான வாய்ப்பு உள்ளது. வங்கக் கடலில் 26ம் தேதி இரவு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகிவிட்டால், அரதன் பிறகு 27ம் தேதி முதல் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறைந்துவிடும்.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மழையின் அளவு (மில்லி மீட்டரில்)
சென்னை மரினா – 47
சோழவரம் ஏரி – 43
பெரம்பூர் – 40
அண்ணா பல்கலை- 33
மீனம்பாக்கம் – 25
திருத்தணி – 13 என்ற அளவில் மழை பெய்துள்ளது “ என தெரிவித்துள்ளார்.