சென்னை: தமிழ்நாட்டில் தொடரும் மழை காரணமாக சாலைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரால்  சென்னை  26மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைநகர்  சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, பல சாலைகளில் மூழ்கி உள்ளதுடன், சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளதால் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கடந்த ஒரு மாதமாக தமிழ்நாடு முழுவதும பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி, மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் மழை நீர்சூழ்ந்துள்ளது. அவர்கள் அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை உள்பட மொத்தம் 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில்  கடந்த 5 நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால், பல இடங்களில் சாலைகள் மழைநீரால் சூழப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.  தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி வந்தாலும், தொடர்ந்து மழை பெய்வதால், மழைநீர் வடிய முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால், உடனுக்குடன் தாழ்வான பகுதிகளிலும், சுரங்கப் பாதைகளிலும் தண்ணீர் தேங்கி விடுகிறது.

இதையொட்டி, பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்து, தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.