நெல்லை: தென்மாவட்டங்களில் மழை, வெள்ளத்தில் கடும் பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு உதவிட புதிய தமிழகம் கட்சியினர் உடனடியாக நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2 நாட்களாக, தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த அபரிமிதமான மழை பெய்து வருகிறது.
கடும் வெள்ளம் காரணமாக, குளங்கள், குட்டைகள், சாலைகள், பாலங்களில் உடைப்புகள் ஏற்பட்டும், ஆறு, ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளின் ஓரங்களில் வாழ்ந்த மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தும் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். (19.12.2023) வரை மழை தொடரும் என வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
எனவே இன்னும் கூடுதலாக மழையும் வெள்ளமும் ஏற்பட வாய்ப்புண்டு. மழை நிற்கட்டும், வெள்ளம் வடியட்டும் என்று காத்திராமல், நிவாரணப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களை அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்து, வீட்டைவிட்டு வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்படுவதற்கு முன்பாக, அவர்களை மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றிட வேண்டும்.
முதியோர்கள், குழந்தைகள், உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டோரை வாகனங்கள் இல்லாவிடினும், சுமந்து வந்தாவது பாதுகாப்பான இடங்களில் சேர்த்திட வேண்டும். ஆடுகள், மாடுகள், கோழிகள் போன்ற கால்நடைகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றிட வேண்டும். பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்குத் தேவைகளின் அடிப்படையில் உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவ உதவிகள் தேவைப்படுவோருக்கு முதலுதவிகளைச் செய்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்/
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.