சென்னை:
அரபிக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்த பகுதியாக அதே இடத்தில் நீடித்து வருவதால், தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியிருந்தது.
அதன்படி நேற்று இரவு முதல் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வரு கிறது. சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழை மற்றும் மிதமான மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள புளியமரம் ஒன்று நெடுஞ்சாலையில் சரிந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. அதுபோல திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், எரியோடு, கோவிலூர் குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை பெய்தது.
அதுபோல் சேலம், காஞ்சிபுரம், விழுப்புரம், திருக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.
சென்னையிலும் நள்ளிரவு முதல் பல இடங்களில் மிதமான மழை தூறி வருகிறது.
வட தமிழகத்தின் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நீலகிரி, ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.