சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸான நிலையில், நாளை (சனிக்கிழமை) அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், இன்றுமுதல் அடுத்த 4 நாட்களுக்கு மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை தொடர்ந்து சென்னை உள்பட பல பகுதிகளுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது. ஆனால், தாழ்வு மண்டலம் நேற்று மாலை கரையை கடந்தது. அப்போது கடல் அலையானது 3 அடி முதல் 5 அடி உயரம் வரை ஆர்ப்பரித்து கரையில் மோதியதை பார்க்க முடிந்தது. இதையடுத்து, தமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை (13ந்தேதி) உருவாகும் சூழல் இருப்பதால், தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
14ஆம் தேதி ஞாயிறன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும், திங்கட்கிழமை உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.