டெல்லி: மூத்த குடிமக்களுக்கான (சீனியர் சிட்டிசன்) சலுகையை நிறுத்தியதால் இந்தியன் ரயில்வேக்கு கூடுதலாக ரூ.1500 கோடி வருவாய்  கிடைத்துள்ளது  என்பது ஆர்டிஐ தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. அதன்படி, ஆண்களுக்கு 40 சதவீதம், பெண்களுக்கு 50 சதவீதம் பயணக் கட்டண சலுகை வழங்கப்பட்டது, ஆனால்,  இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு  ஆண்டு மார்ச் மாதம் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அத்துடன் கட்டண சலுகைகளையும் மத்தியஅரசு ரத்து செய்துவிட்டது. மீண்டும் கட்டண சலுகை வேண்டும் என முதியோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய அமைச்சர், கொரோனா தொற்றுநோய் பரவத் தொடங்கிய 2 ஆண்டுகளுக்குப் பிறகு மூத்த குடிமக்களின் ரயில் பயணங்கள் அதிகரித்துள்ளது என்றும்,  கடந்த  2020 மார்ச் 20 முதல் 2021 மார்ச் 31 வரை 1.87 கோடி மூத்த குடிமக்கள் ரயில்களில் பயணம் செய்துள்ளதாகவும், ஏப்ரல் 1, 2021 முதல் பிப்ரவரி 2022 வரை 4.74 கோடி பேர் பயணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. . ஆனால் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்ட இந்த விலக்கை மீட்டெடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் கைவிரித்தார். தற்போது ரயில் பயணத்தின்போது மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்கப்படுவது இல்லை.  இதனால், அனைத்து மூத்த குடிமக்களும் கூடுதலாக செலவு செய்து பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்தியன் ரயில்வே துறை தெரிவித்துள்ள பதிலில், சீனியர் சிட்டிசனுக்கான சலுகை நிறுத்தப்பட்ட பிறகு இந்தியன் ரயில்வேக்கு கூடுதலாக 1500 கோடி வருவாய்  கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.