திருச்சி ஜங்ஷன் யார்டில் தண்டவாள பராமரிப்பு பணி தொடங்கியுள்ள நிலையில், அதை வரும் 2ம் தேதிக்குள் முடிக்க ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் உள்ள யார்டு பகுதி முக்கியமானதாகும். மதுரை, புதுக்கோட்டை மார்க்கத்தில் இருந்து வரும் ரெயில்கள் அனைத்தும் யார்டு பகுதியில் பாயிண்ட்டில் இருந்து பிரிந்து ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் நடைமேடைகளுக்கு செல்லும். இந்த நிலையில் யார்டில் பாயிண்ட் பகுதியில் உள்ள தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டதால் தண்டவாளத்தில் தேய்மானம் ஏற்பட்டது. மேலும் சிலிப்பர் கட்டைகள் சேதமடைந்தன. இதனால் யார்டில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்தனர். பழைய தண்டவாளங்களை அகற்றி விட்டு புதிய தண்டவாளங்கள் பொருத்துவதற்காக பணிகள் தொடங்கின. புதிய தண்டவாளங்களை சிலிப்பர் கட்டைகளுடன் சேர்த்து தயாராக வைத்தனர்.

இந்த நிலையில் மதுரை மார்க்கத்தில் இருந்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்குள் ரெயில்கள் நுழைய கூடிய யார்டு பகுதியில் தண்டவாளங்களை பராமரிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. பழைய தண்டவாளங்களை ரெயில்வே ஊழியர்கள் அகற்றினர். மேலும் புதிய தண்டவாளங்கள் அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் மண் நிரவப்பட்டு, புதியதாக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. அதன் பின் நவீன எந்திரங்கள் மூலம் புதிய தண்டவாளங்களை குறிப்பிட்ட தூரம் பொருத்தினர். இந்த பணி தொடர்ந்து பூங்குடி வரை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பணியை வருகிற 2-ந் தேதி முடிக்க திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். இந்த பணியின் காரணமாக ரெயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரெயில்வே மின் பாதையிலும் மின்சாரம் நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது குறிப்பிடத்தக்கது.