ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வதில் மோசடி செய்ததாக டெல்லியைச் சேர்ந்த ஒருவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
நொய்டா அருகில் உள்ள அயோத்யா கஞ்ச் பகுதியில் ரயில்வே முன்பதிவு முகவராக செயல்பட்டு வருபவர் 47 வயதான மொய்னுதீன் சிஸ்டி.
பயணிகள் ரயில் டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் நிலையில் சிஸ்டி-யை அணுகினால் தட்கால் மற்றும் வி.ஐ.பி. டிக்கெட்டுகளை டிக்கெட் கட்டணத்தை விட நான்கு மடங்கு விலைக்கு விற்று வந்தார்.
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் டிக்கெட்டுகளை அதிவேகமாக முன்பதிவு செய்ய Nexus, Sikka V2 மற்றும் BigBoss போன்ற சட்டவிரோத மென்பொருளை இவர் பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்த செயலிகளில் பயணிகளின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒருமுறை பதிவிடுவதன் மூலம் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த விவரங்களை மீண்டும் மீண்டும் பதிவிடாமல் டிக்கெட்டுகளை வேகமாக முன்பதிவு செய்வதுடன் கிரெடிட் கார்டு விவரங்கள் கூட ஒருமுறை பதிவு செய்தால் அதிலிருந்து தானாக கட்டணம் செலுத்தப்படும்.
ஐ.ஆர்.சி.டி.சி. முகவராக உள்ள ஒருவர் இதுபோன்ற செயலிகள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதும் ஒருவர் பெயரில் முன்பதிவு செய்த டிக்கெட்டை வேறு ஒரு நபர் பயணம் செய்ய தருவதும் சட்டவிரோத நடவடிக்கை என்பதால் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுபோன்று தட்கால் மற்றும் வி.ஐ.பி. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பலமடங்கு விலையில் விற்று இதுவரை 30 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டியதாக தெரியவந்துள்ளது.
இதுபோன்று டிக்கெட் மோசடியில் ஈடுபடுபவர்களை கைது செய்வது இது முதல் முறையல்ல வி.ஐ.பி. உள்ளிட்ட டிக்கெட்டுகளை மோசடியாக விற்பதன் மூலம் அவ்வப்போது சிலர் சிக்குவதுண்டு.
இந்த நிலையில் இதுபோன்று மோசடியாக டிக்கெட் முன்பதிவு செய்து தரும் முகவர்களையோ அல்லது தனி நபர்களையோ நம்பி ஏமாறவேண்டாம் என்று பொதுமக்களை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.