திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளையில் புதிய திருப்பம் : ஊழியரே குற்றவாளி

Must read

சென்னை

சென்னை திருவான்மியூர் ரயில் நிலய கொள்ளையில் ஊழியர் டிக்காராம் தான் கொள்ளை அடித்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

டிக்காராம்

சென்னை நகரில் உள்ள பறக்கும் ரயில் தடத்தில் திருவான்மியூர் ரயில் நிலையம் முக்கியமானதாகும்.   வழக்கமாக இங்குக் கூட்டமாகக் காணப்படும் நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் இருக்காது.  இந்நிலையில் நேற்று முன் தினம் ஞாயிறு அன்று ரயில் நிலைய கவுண்டரில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

அங்குப் பணி புரிந்த டிக்காராம் என்னும் ஊழியர் தம்மை ஒரு கும்பல் கட்டிப்போட்டு விட்டு அங்கிருந்த ரூ.1.32 லட்சம் பணத்தைத் திருடிச் சென்றதாக புகார் அளித்தார்.  இது நகரில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.   இதையொட்டி காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்த ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லை.  எனவே அக்கம்பக்கத்திலுள்ள  சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.  அப்போது கொள்ளை நடந்ததாகக் கூறப்பட்ட அதிகாலை வேளையில் ரயில் நிலையத்துக்கு ஒரு பெண் வந்து சென்றது தெரிய வந்தது.

விசாரணையில் வந்து சென்ற பெண் ஊழியர் டிக்காராமின் மனைவி என்பது தெரிய வந்துள்ளது.  இதையொட்டி மேலும் விசாரணை செய்ததில் ரயில்வே ஊழியரான டிக்காராம் தனது மனைவியுடன் சேர்ந்து ரூ. 1,32,500 பணத்தைக் கொள்ளை அடித்து ஒரு கும்பல் கொள்ளையடித்ததாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது.  மேலும் விசாரணை நடந்து வருகிறது.

 

More articles

Latest article