சென்னை: சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டு வரும் ‘ட்ரெய்ன் – 18’ தயாரிப்பை, இங்கிருந்து, உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலியிலுள்ள எம்.சி.எஃப்(Modern Coach Factory) தொழிற்சாலைக்கு மாற்றும் முடிவை ரயில்வே வாரியம் மேற்கொண்ட சில நாட்களுக்குள், அத்திட்டத்தின் உயர் அதிகாரியான சுப்ரன்ஷு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள ‘ட்ரெய்ன் – 18’ வடிவமைப்பு பணி, தற்போது சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. இந்த தயாரிப்பு பணியை, உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலியிலுள்ள எம்.சி.எஃப் தொழிற்சாலைக்கு மாற்றும் முடிவை ரயில்வே வாரியம் சமீபத்தில் மேற்கொண்டது.

அதனடிப்படையில், ‘ட்ரெய்ன் – 18’ தயாரிப்பு பணி உள்ளிட்ட வேறுசில பணிகள் குறித்த வரைபடங்களை தம்மிடம் வழங்குமாறு சென்னை ஐ.சி.எஃப் நிர்வாகத்திடம், ரயில்வே வாரியம் கேட்டதாம். ஆனால், கேட்கப்பட்ட வரைபடங்கள் அனைத்தும் தரப்படாமல், குறிப்பிட்டவை மட்டுமே ஐ.சி.எஃப் தரப்பில் கொடுக்கப்பட்டனவாம்.

இதனையடுத்து ஏற்பட்ட சிக்கலால்தான், அந்த தயாரிப்புக் குழுவின் முதன்மை இயந்திரவியல் பொறியாளராக பணியாற்றிய சுப்ரன்ஷு, திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன. அவர், அந்தப் பணியில் பொறுப்பேற்று, ஒரு ஆண்டுக்கும் குறைவான காலகட்டத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவரின் இடத்தில் தற்போது, தென்னக ரயில்வேயில் முதன்மை இயந்திரவியல் பொறியாளராக இருந்த ஏ.கே.கத்பால் நியமிக்கப்பட்டுள்ளார். பணி மாறுதலின் காரணம் குறித்து சுப்ரன்ஷுவை பலமுறை தொடர்புகொண்டு கேட்டபோதும், அவர் எதுவும் பேச மறுத்துவிட்டார். மேலும், ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வாலை தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை.

இதுபோல், ‘ட்ரெய்ன் – 18’ வடிவமைப்புக் குழுவைச் சேர்ந்த வேறுசில அதிகாரிகளும் வரும் நாட்களில் மாற்றப்படவுள்ளார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

– மதுரை மாயாண்டி