டில்லி

ரெயிலில் உணவு வழங்கும் ஊழியர்கள் பயணிகளிடம் ”டிப்ஸ்” தருமாறு கேட்பதை நிறுத்த அமைச்சர் 48 மணி நேரம் கெடு விதித்துள்ளார்.

ரெயில்வே நிர்வாகம் ஷதாப்தி மற்றும் ராஜதானி விரைவு வண்டிகளில் டிக்கட்டுகளில் உணவுக்கும் சேர்ந்து கட்டணம் வசூலித்து வருகிறது.  இந்த வண்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுக்கு உணவு வழங்கும் பணியாளர்களுக்கு ”டிப்ஸ்” வழங்கி வருகின்றனர்.  யாரேனும் டிப்ஸ் வழங்கவில்லை எனில் அவர்களையும் ”டிப்ஸ்” கேட்டு ஊழியர்கள் தொல்லை கொடுத்து வருகின்றனர்.

இது குறித்து ரெயில்வே நிர்வாகத்திடம் பல பயணிகள் புகார் அளித்து வருகின்றனர்.  மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இனி எந்த ஊழியரும் பயணிகளிடம் “டிப்ஸ்” கேட்கக் கூடாது எனவும் அந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ள ஊழியர்களுக்கு 48 மணி நேரம் கெடு விதித்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

அதே போல நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகம் வசூலிக்கும் பணியாளர்கள் மேலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.  இதை கண்காணிக்க அனைத்து ரெயில்களிலும் உள்ள அதிகாரிகளுக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.