சிதம்பரம் வீட்டில் ரெய்டு: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை! திருநாவுக்கரசர்

Must read

சென்னை,

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான  ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் வீட்டில் மத்திய புலனாய்வு துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்துவதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு. ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் ஆகியோர் வீட்டிலும், அலுவலகத்திலும் மத்திய புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தி யிருக்கிறார்கள்.

மத்திய பா.ஜ.க. அரசை தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கடுமையாக திரு. ப. சிதம்பரம் விமர்சித்து வந்ததை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் அவரை அச்சுறுத்துவதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கருதுகிறேன்.

இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்நிலையில், பொதுவாழ்க்கையில் நீண்டகாலமாக செயல்பட்டு வருகிற திரு. ப. சிதம்பரம் அவர்களின் நன்மதிப்பை சிதைக்கிற முயற்சியாக மத்திய பா.ஜ.க. அரசு இச்சோதனையை நடத்தியிருக்கிறது. பா.ஜ.க.வின் இத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி என்றுமே தயார் நிலையில் இருக்கிறது.

இதன்மூலம் காங்கிரஸ் கட்சியை அடக்கி விடலாம் என நினைக்கும் பா.ஜ.க.வின் கனவு பலிக்காது.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பா.ஜ.க.வை விமர்சித்து வருகிற திரு. ப. சிதம்பரத்தின் செயல்பாடுகளை எவரும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

பா.ஜ.க.வின் பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்கிற திரு. ப. சிதம்பரம் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி என்றும் துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்/

More articles

Latest article