ன்றைய பிக் பிரேக்கிங் நியூஸ்.. அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நடிகரும் ச.ம.க. தலைவருமான சரத்குமார் வீட்டில் நடைபெறும் வருமானவரி ரெய்டுதான்.

நேற்றுதான் டி.டி.வி. தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் சரத்குமார்.  இன்று அவரது வீட்டில் ரெய்டு நடந்திருக்கிறது.

ஆகவே, “இதன் பின்னணியில் மத்திய பாஜக இருக்கிறது” என்ற பேச்சு தீவிரமாக அடிபடுகிறது.

இந்த நிலையில் பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை patrikai.com  இதழுக்காக தொடர்புகொண்டு பேசினோம்.

தமிழிசை

 

அமைச்சர் விஜயபாஸ்கர்,  நடிகர் சரத்குமார் வீடுகளில் நடக்கும் வருமானவரி ரெய்டு குறித்து உங்கள் கருத்து என்ன?

இதை நாங்கள் வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் தப்பிக்கக்கூடாது.

தவறு செய்தவர்கள் என்று எப்படி கூறுகிறீர்கள்?

ஆர்.கே. நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரன் தரப்பு, பணத்தை ஆறாக ஓட விடுகிறது.  தவறான வழியில் அவர்களிடம் வந்த பணத்தை, தவறான வழியில் வெளியே விடுகிறார்கள். அதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

நேற்று டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தார் சரத்குமார். இன்று அவரது வீட்டில் வருமானவரி ரெய்டு நடக்கிறது. ஆகவே இது அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கை என்று ஒரு கருத்து சொல்லப்படுகிறதே..

ஒருவர் மீது வருமானவரி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால், ஒரே நாளில் அதைத் தீர்மானித்துவிட மாட்டார்கள். ஏற்கெனவே நீண்ட காலமாக கண்காணித்துக்கொண்டிருந்திருப்பார்கள். சம்பந்தப்பட்டவர் தவறு செய்திருக்கிறார் என்று அதிகாரிகள் உறுதி செய்துகொண்ட பிறகே நடவடிக்கை எடுப்பார்கள். ஆகவே டிடிவி தினகரன் – சரத்குமார் ஆகியோரின் நேற்றைய சந்திப்புக்கும், வருமானவரி ரெய்டுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.

சரத்குமார் – டி.டி.வி. தினகரன்

சரத்குமார் திடீரென முடிவெடுத்து டிடிவி தினகரனை ஆதரிக்க வாய்ப்பில்லை. கடந்த சில நாட்களாகவே இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடந்திருக்கும். ஆகவே இதை அறிந்தே வருமானவரி சோதனைக்கு தயார் ஆகியிருக்கலாம் அல்லவா?

யார் யாருடன் பேச்சுவார்த்தை நடத்தினால் வருமானவரித்துறைக்கு என்ன வந்தது? நான் ஏற்கெனவே சொன்னது போல, சரத் உள்ளிட்டோரை நீண்ட நாட்களாகவே வருமானவரித்துறை கண்காணித்து கொண்டிருந்திருக்கலாம். அதன் வெளிப்பாடாக வருமானவரி சோதனை நடந்திருக்கலாம். இடையில்  டி.டி.வி. தினகரனுக்கும் சரத்குமாருக்கும் இடையே பேச்சு வார்த்தை  நடந்திருக்கலாம். அதற்கும் இதற்கும் தொடர்பில்லை.

விஜயபாஸ்கர், சரத்குமார் என டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வீடுகளில் மட்டுமே ரெய்டு நடக்கிறது என்றும் ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறதே..

காவல்துறையோ, வருமானவரி துறையோ.. பெரும் குற்றம் செய்பவர்களைத்தான் முதலில் குறிவைப்பார்கள். அப்படித்தான் இப்போது நடந்திருக்கிறது. அதற்காக மற்ற அனைவரும் தவறே செய்யவில்லை என்று அர்த்தமாகாது.

சரி.. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்களது வேட்பாளர் கங்கை அமரன், பெரும்பான்மையான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.