சென்னை: கனமழை காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் அறவித்து உள்ளது.
அதன்படி, இன்று சென்னை உள்டப நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதுபோல கேரளா மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேனி கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.