டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2024 மக்களவைத் தேர்தலில் அமேதியில் போட்டியிடுவார் என்று உ.பி.யின் புதிய காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்  தெரிவித்தார். அதுபோல பிரதமர் மோடி தொகுதியான  வாரணாசியில் இருந்து பிரியங்கா காந்தி வாத்ரா தேர்தலில் போட்டியிட முடிவு செய்தால், ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களும் அவருக்காக உழைப்பார்கள் என்றும் ராய் கூறினார்.

ஒருகாலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்தது உ.பி. மாநிலத்தின் அமேதி தொகுதி. மறைந்த பிரதமர்  இந்திரா காந்தியின்  கோட்டையாக கருதப்பட்டது. 1967, 1971 தேர்தல்களில் இத்தொகுதியில் காங்கிரஸ் வென்றது. 1977-ல் அமேதியில் ஜனதா கட்சி வெற்றி பெற்றது. இதன் பின்னர் 1980 முதல் 1996 வரை மீண்டும் அமேதி தொகுதி காங்கிரஸ் வசதி இருந்தது.  இந்திரா காந்திக்கு பிறகு,. அவரது மகன்கள்   சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அவர்களது மறைவுக்கு பிறகு,  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி 1999ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  அதற்குபிறகு, ராஜீவ்காந்தி மகனும், கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி,  2004, 2009, 2014 தேர்தல்களில் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிட்டு , அமேதி தங்களது கோட்டை என நிரூபித்தார். ஆனால்,  2019 தேர்தலில் அமேதி காங்கிரசிடம் இருந்து கைநழுவி பாஜகவிடம் போனது. அங்கு போட்டியிட்ட ராகுலை விட பாஜக வேட்பாளரான மத்தியஅமைச்சர் ஸ்மிதி இரானி சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ராகுல் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக உள்ளார்.

இந்த நிலையில், 2024 மக்களவை தேர்தலில் ராகுல்காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என   உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அஜய் ராய் தெரிவித்துள்ளார்.  அதேபோல் வாரணாசியில் இருந்து போட்டியிட பிரியங்கா காந்தி முடிவு செய்தால் அவருக்கு காங்கிரஸின் ஒவ்வொரு தொண்டரும் முழுமையாக ஒத்துழைப்பார்கள் என்றார்.

 உ.பி. காங்கிரஸ் தலைவராக அஜய்ராய் பெயரை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து மாநில தலைவராக  பொறுப்பேற்றுக் கொண்ட அஜய் ராய்க்கு வாரணாசியில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர்,  “பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாஜகவுக்கு எதிராக வாரணாசியில் தொடங்கிய அரசியல் போட்டி மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கும் எடுத்துச் செல்லப்படும்” என்றார்.

அதையடுத்து செய்தியாளர்கள்,  2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பிரதமருக்கு எதிராக நீங்கள் போட்டியிட்டதால், உங்களுக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டதா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறியவர்,   “நான் ராகுல் காந்தியின் சிப்பாய். அதனால்தான் எனக்கு இந்தப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இது எனது தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. ஆளும் பாஜகவின் பல்வேறு பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததால் என் மீது  தேசிய பாதுகாப்புச் சட்டம்  உள்பட பல வழக்குகள் பாய்ந்தன.  தற்போது, அத்தனையையும் கடந்து நான் ராகுல் காந்தியின் சிப்பாயியாக இன்று இப்பதவிக்கு வந்துள்ளேன்.

இனி உ.பி.யின் கிழக்கே உள்ள சண்டவுலி முதல் மேற்கே உள்ள காசியாபாத் வரை காங்கிரஸ் தொண்டர்கள் என்னுடன் இணைந்து பாஜகவுக்கு எதிராகப் போராடுவார்கள். உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் மிகப் பெரிய பிரச்சினையே அது இங்கே ஒருவித அச்சம் நிறைந்த சூழலை உருவாக்கியுள்ளதுதான். அதை எதிர்த்துப் போராடுவோம்.” என்றார்.