செப்டம்பர் 7 ம் தேதி கன்னியாகுமரியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் துவங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று தனது 46 நாட்களை நிறைவு செய்திருக்கிறது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 12 மாநிலங்கள் வழியே 150 நாட்கள் 3570 கி.மீ. பயணம் செய்யவுள்ள ராகுல் காந்தி இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வழியே தனது பயணத்தை நிறைவு செய்திருக்கிறார்.

பயணத்தின் 22 வது நாளான செப்டம்பர் 30 ம் தேதி கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் துவங்கிய பாதயாத்திரை 46 வது நாளான இன்று ரெய்ச்சூர் மாவட்டத்தில் கர்நாடகாவே அதிர தெலுங்கானா திகைக்க நிறைவடைந்தது.

பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயம் வழியாக ஆரம்பித்து பருத்தி விளையும் ஏர்மர்ஸ் கிராமத்தில் இன்று காலை நிறைவடைந்தது.

காவிரி தொடங்கி துங்கபத்திராவை கடந்து கிருஷ்ணா நதியருகே நிறைவு பெற்றிருக்கும் கர்நாடக பயணத்தின் மூலம் தான் பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் கடிதத்தில் கர்நாடக மக்கள் தனக்கு அளித்த அன்பிற்கும் மாபெரும் வரவேற்புக்கும் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.

அரிசி, நிலக்கடலை, பருத்தி என எந்த விவசாயம் செய்பவராக இருந்தாலும் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதைக் கண்கூடாக காண நேரிட்டது.

விவசாயிகள் மட்டுமன்றி இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருவதையும் தன்னால் உணர முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஒற்றுமை பயணத்தின் வழியாக தனக்கு கிடைத்த இந்த அனுபவம் மக்களின் இன்னல்களையும் சவால்களையும் போக்க தேவையான நடவடிக்கையை எடுக்க தனக்கு உதவும் என்று தெரிவித்த ராகுல் காந்தி கிருஷ்ணா நதியைக் கடந்து தெலுங்கானா மாநிலம் மஹபூப் நகர் மாவட்டம் குடிபெல்லூர் பகுதியை அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து யாத்திரையில் பங்கேற்றவர்கள் தீபாவளியைக் கொண்டாட அவரவர் சொந்த மாநிலங்களுக்கு பயணப்பட்ட நிலையில் வரும் 26 ம் தேதி காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ராகுல் காந்தி பின்னர் அக். 27 ம் தேதி மஹபூப் நகரில் இருந்து தனது பயணத்தை மீண்டும் துவங்குகிறார்.