டில்லி

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கமல்நாத், ப சிதம்பரம் மற்றும் கமல்நாத் ஆகியோருக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கடும் தோல்வியை தழுவி உள்ளது. இம்முறை மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியினர் நம்பி இருந்தனர். ஆகையால் இந்த தோல்வி கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று நடந்த போது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது அவர், “இந்த தேர்தலில் பாஜக்வுக்கு எதிராக ஒரு கடுமையான அணியை அமைக்க நான் முடிவு செய்திருந்தேன். ஆனால் எனக்கு மூத்த தலைவர்கள் பலர் ஒத்துழைப்பு தரவில்லை. குறிப்பாக கமல்நாத், அசோக் கெகலாத், ப சிதம்பரம் போன்றோர் தங்கள் வாரிசுகளுக்கு தேர்தல் வாய்ப்பு கிடைக்க பாடு பட்ட அளவுக்கு கட்சி வெற்றிக்கு பாடுபடவில்லை. வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிப்பதில் எனக்கு விரும்ப்பம் இல்லாமல் இருந்தது.

பாஜக மற்றும் மோடிக்கு எதிராக நான் பல குற்றச்சாட்டுகளை பிரசாரத்தின் போது முன் வைத்தேன். ஆனால் அதை மூத்த தலைவர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. தற்போதுள்ள நிலையில் மூத்த தலைவர்களை விட வலுவான இளம் மாநிலத் தலைவர்கள் தேவைப்படுகின்றனர். நாம் ஆட்சியில் உள்ள மாநிலங்களிலேயே நாம் படுதோல்வி அடைந்துள்ளோம்.

மொத்தத்தில் இந்த தோல்விக்கு நான் தலைவர் என்னும் முறையில் பொறுப்பு ஏற்கிறேன். நான் கட்சி பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்.” என தெரிவித்தார். ஆனால் ராகுலின் ராஜினாமாவை காங்கிரஸ் மூத்த செயற்குழு உறுப்பினர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.