ஜெய்ப்பூர்:

சட்டசபைக்கு காங்கிரஸுக்கும் மக்களவைக்கு மோடிக்கும் வாக்களிப்போம் என ராஜஸ்தானில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் வாக்காளர்கள் தெளிவாக தெரிவித்திருக்கிறார்கள்.


கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் ராஜஸ்தானில் நடந்த சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு முடிந்ததும், தி இந்து ஆங்கில நாளேடு மற்றும் லோக்நிதி இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தின.

வாக்களித்துவிட்டு வந்த மக்கள், சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களித்தோம். மக்களவை வந்தால் மோடிக்கு வாக்களிப்போம் என்றனர்.

நாங்கள் மோடிக்கு எதிரானவர்கள் அல்ல. வசந்த்ராவைத் தான் பிடிக்கவில்லை என்ற கோஷம் சட்டசபை தேர்தலில் எதிரொலித்தது. சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமாகி இருக்கிறது.

சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களித்த மக்கள், சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் பாஜகவை 25 தொகுதிகளை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு 58.5% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 20% வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளது பாஜக.

ஆனால், சட்டசபை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட காங்கிரஸ் கட்சி தற்போது 5% வாக்குகளை குறைவாக பெற்றுள்ளது.

இதே போன்ற நிலை மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களிலும் பாஜகவுக்கு தொடர்கிறது. இந்த மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. ஆனால், மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோருக்கிடையே காங்கிரஸ் கட்சிக்குள்ளே நடந்த மோதலால், அம் மாநிலத்தில் ஆட்சி அமைக்கவே தாமதம் ஆனது.

இவை எல்லாம் பாஜகவுக்கு சாதகமான அம்சங்களாக மாறியிருக்கின்றன.

ஐந்தில் மூன்று பங்கினர் மோடி பிரதமராக வேண்டும் என்றும், ஐந்தில் ஒரு பங்கினர் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவித்திருந்தனர்.

ராஜஸ்தானில் மொத்தமுள்ள மக்கள் தொகையில் பாதி அளவுக்கு இருக்கும் ஜாட் மற்றும் பின் தங்கிய வகுப்பினரின் வாக்குகள் பாஜகவுக்கு ஆதரவாக திரும்பியது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்தது.

குறிப்பாக, மலைவாழ் மக்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு பெருகியிருப்பதும் தெரியவந்தது.
அதேசமயம் பிராமணர்கள், ராஜ்புத் மற்றும் வர்த்தகர்களின் வாக்குகளையும் இம்முறை பாஜக பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அது உண்மையாகியிருக்கிறது.
காங்கிரஸுக்கு தலித் மற்றும் முஸ்லிம்கள் ஆதரவு மட்டுமே இருப்பதாகவும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்தது.

விவசாய கடன் ரத்து என்ற கெலாட் அரசின் அறிவிப்பு, காங்கிரஸுக்கு வாக்குகளைப் பெற்றுத் தரவில்லை.

மாறாக, 35% விவசாயிகள் மட்டுமே இந்த கடன் ரத்து செய்யப்பட்டதில் பயனடைந்தனர். மீதமுள்ளோர் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர்.

எவ்வித காய் நகர்த்தலும் காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்குகளைப் பெற்றுத் தரவில்லை என்பதே உண்மை.