டெல்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இளைஞர்களுக்கான 30 லட்சம் வேலைவாய்ப்பு உறுதி உள்பட வருகிற மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி களை ராகுல் காந்தி பட்டியிலிட்டுள்ளார். இந்தியாவில் ஆட்சிக்கு வந்ததும், இந்த காலி பணியிடங்களை நிரப்புவேன் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.
தற்போதுள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற மே மாதம் முடிகிறது. இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2வது அல்லது 3வது வாரத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.
நாடே நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திரும் வேளையில், மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேவேளையில், பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி முயற்சித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரித்தல், பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றன. அதுபோல, எந்தெந்த தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதும் குறித்தும் விவாதிக்கப்பட்டு, வேட்பாளர்கள் தேர்வு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் , நாடு முழுவதும் காலியாக உள்ள 30 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி தெரிவித்து உள்ளார்.
பாரத ஜோடா நடைப்பயணத்தின்போது நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பட்டியலிட்டார். அதன்படி, “30 லட்சம் அரசு பணிகள் காலியாக உள்ளன. பாஜக அவற்றை நிரப்பவில்லை. ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிரப்புவதே காங்கிரஸின் முதன்மையான பணி” என தெரிவித்தார். இளைஞர்களுக்கான 30 லட்சம் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என்றவர், எந்தெந்த துறைகளில் எவ்வளவு இடங்கள் காலியாக உள்ளன என்ற பட்டியலையும் வெளியிட்டார்.
நாடு முழுவதும் மொத்தம் 60லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அதில், காலியாக உள்ள சுமார் 30 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளது.
அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள்:
● மத்திய அரசு துறை – 9,10,153
● பொதுத்துறை வங்கிகள் – 2,00,000
● சுகாதாரப் பணியாளர்கள் – 1,68,480
● அங்கன்வாடி – 1,75,057
● மத்திய மற்றும் நவோதயா பள்ளிகள் – 16,329
● தொடக்கப் பள்ளிகள் – மாநிலங்கள் – 8,37,592
● மத்திய பள்ளி – 18,647
● IIT/IIM/IIIIT/NIT – 16,687
● பிற மத்திய கல்வி நிறுவனங்கள் – 1,662
● இந்திய ராணுவம் – 1,07,505
● மத்திய ஆயுத போலீஸ் படை – 91,929
● மாநில காவல்துறை – 5,31,737
இது மொத்தம் 30,82,139 வேலைகள் காலியிடங்கள் ஆகும்,
இது இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி இந்தியா ஆட்சிக்கு வந்த பிறகு நிரப்புவதாக உறுதியளித்துள்ளார். இது இந்தியாவை முழுவதுமாக மாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்ட ரீதியாக உறுதி செய்யப்படும் , சுயாதீன மற்றும் ஆன்லைன் தளங்களுக்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சமுதாய பாதுகாப்பு அளிக்கப்படும், புத்தாக்கத் தொழில்களுக்கான முதலீடாக 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும், தேர்வு வினா தாள்கள் கசிவதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் பிறப்பிக்கப்படும் , ஆன்லைன் ஊழியர்களுக்கு சமுதாய பாதுகாப்பு அளிக்கப்படும், புத்தாக்க நிறுவனங்களுக்கான முதலீடாக ரூ.5000 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும், பட்டதாரி மற்றும் பட்டய படிப்பு நிறைவு செய்த இளைஞர்களுக்கு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையுடன் ஓராண்டு கட்டாய தொழிற்பயிற்சி வழங்கப்படும் என்று கூறியவர், காங்கிரஸ், அனைவருக்குமான வேலைவாய்ப்பு உரிமையை அளிக்கும் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
பாரத ஜோடா நடைப்பயணத்தில் உள்ள ராகுல் காந்தி, மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜஸ்தானில் பயணத்தைத் தொடரவுள்ளார். மேலும், 100 நாள் ஊரக வேலைத் திட்டம் உறுதி செய்யப்படும், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் உள்ளிட்டவற்றை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.