இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவராக பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு நெருக்கமான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து மல்யுத்த வீரர்கள் பலரும் தங்கள் பதக்கங்களை திருப்பிக் கொடுத்துள்ளனர்.

மல்யுத்த வீரர்கள் எழுப்பிய பாலியல் சர்ச்சை தொடர்பாக WFIன் முன்னாள் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்காததைக் கண்டித்து இவர்களின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மல்யுத்த வீரர்களை இன்று சந்தித்து பேசினார்.

ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள சாரா கிராமத்தில் மல்யுத்த வீரர் வீரேந்திர ஆர்யா-வுக்கு சொந்தமான ‘ஆர்ய வீரேந்திர அகாரா’ என்ற மல்யுத்த பயிற்சி மையத்திற்கு இன்று காலை 6:15 மணிக்கு ராகுல் காந்தி சென்றார்.

மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலை அடுத்து மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக சாக்ஷி மாலிக் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ பட்டத்தை திருப்பிக் கொடுத்தார்.

மேலும், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் தனக்கு வழங்கப்பட்ட கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதை திரும்ப வழங்குவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் மல்யுத்த வீரர்களை சந்தித்து அவர்களின் பிரச்சனை குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி, “இந்த வீராங்கனைகள், இந்தியாவின் மகள்கள், அரங்கில் சண்டை செய்வதை கைவிட்டு தங்கள் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் தெருவில் இறங்கி போராட வைத்தது யார் ?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “இவர்கள் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவிகள், எளிமையானவர்கள், இந்தியாவையும் மூவர்ணக் கொடியையும் சர்வதேச அரங்கில் பெருமைப்படுத்தியவர்கள். இவர்களின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முன் வரவேண்டும்” என்று கூறினார்.

மல்யுத்த வீரர்களுடனான இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்களுடன் காலை உணவருந்திய ராகுல் காந்தி முன்னதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவிடம் மல்யுத்த பயிற்சியில் ஈடுபட்டார்.