ஸ்ரீநகர்

பாகிஸ்தான் கொண்டாட்டத்துக்கு ராகுல் காரணம் இல்லை என பாஜகவுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத இயக்க தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்க ஏற்கனவே இந்தியா மூன்று முறை ஐநா பாதுகாபு குழுவுக்கு கோரிக்கை விடுத்தது.   மூன்று முறையும் சீனா அதற்கு தடை விதித்தது.   புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் ஈ முகமது பொறுப்பேற்றதால் மீண்டும் அதே கோரிக்கையை ஐநா பாதுகாப்பு சபைக்கு இந்தியா அனுப்பியது.  தற்போதும் சீனா அதை நிராகரித்துள்ளது.

இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி சீனாவிடம் அச்சம் கொண்டுள்ளதால் சீனாவிடம் பேசி தடை விதிக்காமல் இருக்க செய்யவில்லை என தெரிவித்தார்.   அதற்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ராகுல் காந்தியின் இந்த அறிவிப்பால் பாகிஸ்தான் கொண்டாட்டம் அடைந்துள்ளதாக கூறினார்.

அதற்கு முன்னாள் காஷ்மீர் முதல்வர் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான உமர் அப்துல்லா, “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாகிஸ்தான் கொண்டாட்டத்துக்கு காரணம் இல்லை.  நீங்கள் காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் இடைத்தேர்தலை 2017 ஆம் வருடம் தள்ளி வைத்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு ஒரு சிறிய கொண்டாட்டத்தை கொடுத்தீர்கள்.

தற்போது காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தலை நடத்தாமல் இருந்து பாகிஸ்தானுக்கு மாபெரும் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளீர்கள்.   பிரதமர் மோடி சீனாவுக்கு அசாரை அளித்து சீனாவிடம் சரண் அடைந்துள்ளார்.  காஷ்மீர் மாநில தேர்தலை நடத்தாமல் பாகிஸ்தானிடம் சரண் அடைந்துள்ளார்.  அப்படி இருக்க பாஜக எவ்வாறு உள்நாட்டு பாதுகாப்பு குறித்தும் தீவிரவாத எதிர்ப்பு குறித்தும் பெருமை கொள்கிறது?” என கேட்டுள்ளார்.