புதுடெல்லி: தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறும் வகையில், பாரதீய ஜனதா கட்சியினர் வெளியிட்டிருந்த ஒரு முகநூல் பதிவை நீக்கும்படி, ஃபேஸ்புக் நிறுவனத்தை, தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது.

சமீபத்தில், பாகிஸ்தான் அரசால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுடன், டெல்லி சட்டமன்ற பாரதீய ஜனதா உறுப்பினர் ஓம் பிரகாஷ் ஷர்மா இருப்பதுபோன்ற போஸ்டர், முகநூலில் வலம் வந்தது.

இந்தப் போஸ்டர்களில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோரின் படங்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால், தேர்தல் பிரச்சார படங்களில், ஒரு ராணுவ வீரரின் படத்தைப் பயன்படுத்துவது, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலங்களில், ஏற்க முடியாத செயல் என்பதாக புகார் கிளம்பியது.

எனவே, இதுதொடர்பாக வந்த புகாரையடுத்து, அந்த சர்ச்சைக்குரிய போஸ்டரை முகநூல் பக்கத்திலிருந்து நீக்கிவிடும்படி, அந்நிறுவனத்தை, தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு சட்டத்தின்படி, தேர்தல் கால நன்னடத்தை விதிமுறைகள், சமூக வலைதளங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி