டெல்லி:

தென்னிந்திய மக்களுடன் நாங்களும் உள்ளோம் என்பதை காட்டவே,கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்து உள்ளார்.

இன்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட, ராகுல்காந்தி, நாட்டு மக்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். குறிப்பாக தமிழகத்தின் முக்கிய கோரிக்கையான நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சினை, இலங்கை பிரச்சினை குறித்தும் அறிவித்து உள்ளார்.

ராகுல்காந்தியின் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் அவர் கேரளாவில் போட்டியிடுவது குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் விளக்கம் கூறினார்.

தென்னிந்தியாவில் போட்டியிடுமாறு பல தரப்பினர் என்னை வலியுறுத்தினர். தங்களை கவனிக்க யாரும் இல்லை என்பதே தென்னிந்திய மக்களின் கவலையாகும். அதிலும் பிரதமர் மோடி தங்களை புறக்கணித்து விட்டனர் என தென்னிந்திய மக்கள் கருதுகின்றனர். தென் இந்திய மக்களுடன் நாங்கள் உள்ளோம் என்பதை அவர்களுக்கு கூறிக் கொள்ளவே வயநாட்டில் போட்டியிடுகிறேன் என்று தெரிவித்தார்.

ராகுல்காந்தி ஏற்கனவே உ.பி. அமேதி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 2வது தொகுதியாக கேரள மாநிலம் வயநாட்டிலும் போட்டியிடுகிறார்.

ராகுல்காந்தி தென்மாநிலங்களில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரசார் தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில், வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.