புதுடெல்லி:
எடப்பாடி பழனிசாமி உடன் தொலைபேசியில் ராகுல் காந்தி பேசியதாக வெளியான தகவல் குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதனால் ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என முடிவெடுத்து சமீபத்தில் பொதுக்குழுவை கூட்ட திட்டமிட்டு இருந்தார். ஆனால் பொதுக்குழுவில் ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர்ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் புதிதாக எந்த தனி தீர்மானமும் நிறைவேற்றக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் , பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு வருகிற 11-ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ராகுல் காந்தியிடம் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தகவல் வெளியானது . தேர்தல் வியூக வகுப்பாளரான சுனில் எடப்பாடியின் நண்பர் என்றும் இவரிடம் அடிக்கடி ஆலோசனை கேட்டு வருகிறார் என்றும் , அதிமுகவில் ஏற்பட்ட விவரங்களை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை சுனில் சந்தித்ததாகவும், அரசியல் ரீதியாக பல விஷயங்களை அவர்கள் பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்போது ராகுல் காந்தியை சந்தித்த சுனில் தனது ஃபோனில் இருந்து எடப்பாடி தொடர்பு கொண்டு அவரிடமும் பேச வைத்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி உடன் தொலைபேசியில் ராகுல் காந்தி பேசியதாக வெளியான தகவல் தவறானது என்று காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ்- திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி பலவீனப்படுத்த முயற்சிக்கும் வகையில், இது போன்ற வதந்திகளை பரப்புவதாக காங்கிரஸ் தலைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரான திரு யஷ்வந்த் சின்கா அவர்களுக்கு ஆதரவு கோரி திரு ராகுல் காந்தி அதிமுக தலைவர் திரு எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஒரு செய்தி வந்திருக்கிறது.
இது முற்றிலும் தவறான பொய் செய்தி. அப்படி ஒரு தொலைபேசி உரையாடல் நிகழவே இல்லை. திமுக காங்கிரஸ் கூட்டணி இடையே குழப்பத்தை விளைவித்து அதை வலுவிழக்க செய்யும் எந்த ஒரு மோசமான முயற்சியையும் எதிர்கொள்ளும் அளவுக்கு எங்கள் கூட்டணி வலுவாகவே இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.