மும்பை:
காராஷ்டிரா சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக பாஜக-வைச் சேர்ந்த ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்காக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடியது. இதற்காக தாஜ் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மொத்தமாக சட்டமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். துணை சபாநாயகர் நர்ஹரி அவையை நடத்தினார். பா.ஜ.க சார்பில் முதன்முறையாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் நர்வேகர் சபாநாயகர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்திருந்தார். சிவசேனா கூட்டணி தரப்பில் ராஜல் சால்வி மனுத்தாக்கல் செய்திருந்தார். ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே சிவசேனா அணிகள் தரப்பில் தங்களது ஆதரவு வேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகர் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் ஆதரவு கொடுக்கும் உறுப்பினர்களை எண்ண முடிவு செய்யப்பட்டது. இதில் சமாஜ்வாடி, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி உறுப்பினர்கள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. அவர்கள் நடுநிலை வகித்தனர். ஓட்டெடுப்பு முடிந்தவுடன் துணை சபாநாயகர் நர்ஹரி சிவசேனா உறுப்பினர்கள் கொறடா உத்தரவை மீறி வாக்களித்துள்ளனர். அவை அனைத்தும் வீடியோவில் பதிவாகியிருக்கிறது என்று துணை சபாநாயகர் தெரிவித்தார். வாக்குகள் எண்ணப்பட்டதில் பா.ஜ.க-வின் ராகுல் நர்வேகருக்கு 164 வாக்குகளும், சிவசேனா கூட்டணி வேட்பாளர் ராஜன் சால்விக்கு 107 வாக்குகளும் கிடைத்திருந்தன.

கடந்த ஆண்டிலிருந்து சபாநாயகர் பதவி காலியாக இருந்தது. தற்போது நடந்த சபாநாயகர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பதன்மூலம் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கும் ஷிண்டே அரசுக்கு இது முதல் வெற்றியாக கருதப்படுகிறது. புதிய சபாநாயகர் சிவசேனா அதிருப்தி உறுப்பினர்களை உண்மையான சிவசேனா என்று அங்கீகரிக்கும்பட்சத்தில் அவர்கள் வேறு ஒரு கட்சியில் சேரவேண்டிய அவசியம் இருக்காது. அவர்கள்மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கையும் எடுக்க முடியாது.