டில்லி

டில்லியில் ஒரு பெண் கொடூரமாக தாக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 26 ஆம் தேதி அன்று டில்லி கஸ்தூரிபாய் நகரில் போதை  பொருள் விற்பனை செய்யும் கும்பல் ஒரு இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது.  மேலும் அந்த பெண்ணின் தலைமுடியை வெட்டி அவருக்கு பொது வெளியில் செருப்புமாலை அணிவித்து இழிவு படுத்தி சமூக தளங்களில் அந்த வீடியோ வெளியானது.

இந்த வீடியோ மக்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியது,  டில்லி மகளிர் ஆணைய தலைவர் மஸ்வாதி இந்த கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறைக்கு நோட்டிஸ் அனுப்பினார்.  காவல்துறையினர்  இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பெண்கள் உள்ளிட்ட 14 பேரைக் கைது செய்தனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “ஒரு பெண் கொடூரமாகத் தாக்கப்பட்டது நமது சமூகத்தின் கொடூர முகத்தை அம்பலப்படுத்துகிறது.  இந்தியர்களில் பலர் பெண்களை மனிதர்களாகவே கருதுவதில்ல.  நாம் இந்த வெட்கக்கேடான உண்மையை ஒப்புக் கொண்டாக வேண்டும்” எனப் பதிவிட்டு தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.