பாட்னா

ராகுல் காந்தி பிரதமர் ஆகலாம் என பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது அவர் காங்கிரஸ் கட்சி வரும் பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால் பிரதமராவேன் என தெரிவித்தார்.   அதற்கு பிரதமர் மோடி உட்பட பல பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.   இந்நிலையில் பாஜக பாராளுமன்ற உறுப்பினரும் மோடியை கடுமையாக விமர்சிப்பவருமான சத்ருகன் சின்ஹா டிவிட்ட்ரில் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பதிவுகளில், ”இந்தியாவின் மிகப் பழமையான கட்சியின் புதிய தலைவர் தற்போது மிகவும் மன முதிர்ச்சி அடைந்துள்ளார்.  அவர் சமீபத்தில் நீரவ்., லலித், மல்லையா, வங்கிகள், ரஃபேல் பேரம் என பலவற்றை பற்றியும் சிறப்பான கேள்விகள் கேட்கிறார்.   ஆனால் நமக்கு அதற்கான பதில் இல்லாததால் அவரைப் பற்றி விமர்சித்து கேள்விகளை திசை திருப்புகிறோம்.

யார் ஆட்சிக்கு வரவேண்டும் என தீர்மானிப்பது மக்கள் தான், நாம் அல்ல என்பதை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.    ஒரு பெரிய கட்சியின் தலைவர்,  அதுவும் மிகவும் புகழ் பெற்றவர் அவர் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தால் பிரதமர் ஆகலாம்.  இதில் தவறேதும் இல்லை.   இதற்காக நாம் கூச்சலிடுவதோ கதறுவதோ கூடாது.” என பதிந்துள்ளார்.