டெல்லி

மெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் குறித்து முதலில் அறிவித்ததை பற்றி விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 4 நாட்களாக இந்தியா – பாகிஸ்தான் இடையே உச்ச கட்ட போர்பதற்றம் நிலவி இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் சமாதான முயற்சியால் இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இதையொட்டி இரு நாடுகளின் முப்படைகளும் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் தாக்குதலை நிறுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்த போர் நிறுத்தம் குறித்து முதலில் அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவித்தார்.

டிரம்ப் அறிவித்த பிறகே மத்திய அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. முதலில் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை டிரம்ப் அறிவித்தது ஏன்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு எழுதிய  கடிதத்தில்,

“நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் ஒருமனதான கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த கூட்டம் எதிர்வரும் சவால்களை எதிர்கொள்ளவும், நமது கூட்டுத் தீர்மானத்தை நிரூபிக்கவும் ஒரு வாய்ப்பாக அமையும்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதன்முதலில் அறிவித்த போர்நிறுத்தம் ஆகியவை குறித்து மக்களும், அவர்களது பிரதிநிதிகளும் விவாதிப்பது மிகவும் முக்கியமாகும்”

என்று தெரிவித்துள்ளார்.