கோவை: உதகை செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்ட பிறகு . முதன்முறையாக, தனது தொகுதியான வயநாட்டிற்கு வருகை தரும் ராகுல் காந்தி, வரும் வழியில் இன்று ஊட்டி செல்கிறார். உதகையில் இருந்து சொந்த தொகுதி யான வயநாடு செல்கிறார். இன்று மற்றும் நாளை 2 நாள் பயணமாக தமது வயநாடு தொகுதிக்கு ராகுல்காந்தி செல்ல இருப்பதாகவும், அங்கு நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உதகை செல்லும் ராகுல் காந்தி இன்று காலை விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். 9.20 மணியளவில் கோவை வந்தடைந்தார். அவருக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல திட்டமிட்டு உள்ளார். சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டம் உதகை வழியாக வயநாடு செல்ல இருக்கிறார்.
உதகை செல்லும் அவர், தனியார் விடுதியில் முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்து தேநீர் அருந்துகிறார். அதன்பின் ஹோம் மேட் சாக்லேட் குறித்து கேட்டறிகிறார். பின்னர் நீலகிரி செல்லும் வழியில் முத்தநாடுமந்து என்னும் தோடர் பழங்குடியினர் கிராமத்திற்கு சென்று, பழங்குடியின மக்களுடன் உரையாட உள்ளார். மேலும், அவர்களது கோயிலையும் பார்வையிடுகிறார். அதன்பின் சாலை மார்க்கமாக கூடலூர் வழியாக வயநாடு செல்கிறார்.
ராகுல் காந்தியின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்திக்கு, மோடி சமூகம் குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து மீண்டும் எம்.பியான ராகுல்காந்தி, தனது தொகுதிக்கு செல்கிறார்.