டில்லி

நியாய் எனப்படும் குறைந்த பட்ச ஊதிய திட்டத்துக்காக வருமான வரி உயர்த்தப்பட மாட்டாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ரூ.6000 வழங்கப்படும் என அறிவித்தார்.  நியாய் எனப்படும் இந்த திட்டம் நடைமுறைக்கு ஒத்து வராது என பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விமர்சித்தன.

ஆனால் பல பொருளாதார நிபுணர்கள் இந்த திட்டம் நடைமுறைக்கு சாத்தியமானது என தெரிவித்தனர்.

இந்நிலையில் பாஜக அடுத்ததாக இந்த திட்டத்துக்கு நிதி உதவி தேவைப்படுவதால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நடுத்தர வகுப்பு மக்களின் வருமான வரி உயர்த்தப்படும் என தெரிவித்தது.    இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்திய போது இதே கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ராகுல் காந்தி, “நியாய் திட்டத்துக்காக நடுத்தர வகுப்பு மக்களின் பணம் பயன்படுத்த மாட்டோம்.   அத்துடன் வருமான வரியையும் நாங்கள் உயர்த்த மாட்டோம்.   இதற்கான அறிவிப்பை அளிக்கும் முன்பே நாங்கள் அனைத்து கணக்கையும் போட்டுள்ளோம்.

தேர்தல் அறிக்கையில் நாங்கள் நியாய் மட்டுமின்றி விவசாயிகள், ஏழைகள் உள்ளிட்டோருக்கான வேறு பல நன்மை அளிக்கும் திட்டங்களையும் இணைத்துள்ளோம்.   அனத்து தரப்பினரையும் கலந்தாலோசித்த பிறகே தேர்தல் அறிக்கையை நாங்கள் தயாரித்துள்ளோம்.

குறிப்பாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33% இடஒதுக்கீடு அளிப்போம்” என தனது பதிலில் தெரிவித்துள்ளார்.