ஜெய்ப்பூர்

இன்று விலைவாசி உயர்வு மற்றும் பண வீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் பேரணி நடத்துகிறது.

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கால் கடும் விலைவாசி உயர்வு மற்றும் பண வீக்கம் ஏற்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.   மத்திய அரசின் இந்த போக்கைக் கண்டித்து தலைநகர் டில்லியில் மாபெரும் பேரணி நடத்தக் காங்கிரஸ் திட்டமிட்டது.   டில்லியில் இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.  இதனால் ஜெய்ப்பூரில் இன்று பேரணி நடைபெற உள்ளது.

இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி ஆகியோர் தலைமை வகிக்க உள்ளனர்.   இதில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பங்கேற்பது இன்று உறுதி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  தமிழகம் உள்பட  நாடு முழுவதும் இருந்து காங்கிரசார் இந்த பேரணியில் கலந்து கொள்ள ஜெய்ப்பூரில் திரண்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் அஜய் மக்கான் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அஜய் மக்கான் தனது அறிக்கையில், “பாஜகவின் மக்கள் விரோத போக்கால் நாட்டில் பணக்காரர்கள் பணக்காரர்களாக ஆகிறார்கள், ஆனால் ஏழைகள் மேலும் ஏழைகளாகின்றனர்   ஆகவே பாஜக அரசைக் கண்டித்து ஜெய்ப்பூரில் நாங்கள் மாபெரும் பேரணி நடத்த உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.