புதுடெல்லி: அமெரிக்க சம்பவத்தை மையப்படுத்தி. உலகின் பல நாடுகளில் நிறவெறிக்கு எதிரான போராட்டமும் கருத்தாக்கமும் வலுவடைந்துள்ள சூழலில், வெள்ளைத்தோலை வலியுறுத்தி விற்பனை செய்யப்படும் ஃபேர்னஸ் கிரீம் விற்பனையை இந்தியாவில் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அந்த நிறுவனத்தின் சார்பில், ஆசியா மற்றும் மத்தியக் கிழக்குப் பகுதிகளில் நியூட்ரோஜினா ஃபைன் ஃபேர்னஸ் கிரீம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம், கிளீன் & கிளியர் ஃபேர்னஸ் கிரீம் விற்பனை இந்தியாவில் மட்டுமே நடைபெறுகிறது.

தற்போது உலகில் எழுந்துள்ள நிறவெறிப் பிரச்சினையின் அடிப்படையில், இத்தகைய கிரீம் விற்பனைகளை நிறுத்துவதற்கு அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்தவகையில், இந்தியாவிலும் கிளீன் & கிளியர் ஃபேர்னஸ் கிரீம் விற்பனை நிறுத்தப்படவுள்ளது.

“ஆரோக்கியமான தோல்தான் அழகான தோல்” என்று அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கேற்ப, அந்நிறுவனத்தின் இணையதள மற்றும் ரீடெய்லர் பக்கங்கள் மாற்றப்படவுள்ளன. அதேசமயம், ஏற்கனவே இருக்கும் சரக்குகள் விற்பனையில் இருந்தாலும், இனி‍மேல் புதிய தயாரிப்புகள் இடம்பெறாது என்று கூறப்பட்டுள்ளது.

‍ ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டாலும், ஃபேர்னஸ் கிரீம் விற்பனை கேந்திரமாக திகழும் இந்தியாவில், இந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் போன்ற நிறுவனங்கள், ஃபேர்னஸ் கிரீம் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதால், இந்திய நுகர்வோருக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.