வரும் 27ம் தேதி தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் நடக்கிறது. இதில் கே.பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி போட்டியிடுகிறது. எதிர்த்தரப்பில் ஆர்.கே.செல்வமணி தரப்பினர் போட்டியிடுகின்றனர்.

இமயம் அணியில், தலைவர் பதவிக்கு பாக்யராஜ். செயலாளர் பதவிக்கு பார்த்திபன். பொருளாளர் பதவிக்கு வெங்கட் பிரபு என மொத்தம் 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் நேற்று இயக்குனர் சங்க தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை விருகம்பாக்கத்தில் இயக்குனர் பாக்யராஜ் வெளியிட்டார்.

பின்னர் மேடையில் பேசிய அவர், “தற்போது உள்ள ( ஆர்.கே. செல்வமணி தலைமையிலான) இயக்குனர் சங்க நிர்வாகிகளை சந்திப்பதே மிக சவாலான ஒன்றாக இருக்கிறது. தொலைபேசியில் கூட தொடர்புகொள்ள முடியவில்லை.

ஆனால் நான் நீண்ட வருடங்களாக ஒரே தொலைபேசி எண்ணையே தான் வைத்துள்ளேன். நான் வெற்றிபெற்றால் இயக்குனர்கள் எந்த பிரச்சினை என்றாலும் எப்போதும் என்னை அழைக்கலாம்.

இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிட அதிக கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. ஆகவே, அனைவரும் போட்டியிடும் சூழலை ஏற்படுத்த நியாமான தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும். சங்கம் சார்பில் செய்யப்படும் உதவி தொகை விவரங்களை அந்தந்த மாதம் இறுதியில் ரசீதுடன் வெளியிடுவோம்.

சங்கத்திற்கு என்று யூட்யூப் சேனல் துவங்கப்படும். குடியிருக்க வீட்டு மனை திட்டம் செயல்படுத்தப்படும்.

திரைப்படத்தின் சென்சார் கிடைப்பதற்கு முன்பாக அனைவருக்கும் ஊதியம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும். புதுமுக இயக்குனர் கதைகளை தயாரிக்கும் உதவியை சங்கம் சார்பில் முன்னெடுத்து செல்வோம்” என்று கே.பாக்யராஜ் தெரிவித்தார்.