சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட போவது இல்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.

புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அந்த 9 மாவட்டங்களிலும் மறுவரையறைப் பணிகளை முடித்து 4 மாதங்களில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் மறு அறிவிப்பாணையை தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி வெளியிட்டார். இந் நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட வில்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: இந்த தேர்தல் மக்கள் நலுனுக்கானதாக இருக்கப் போவதில்லை. இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகம்தான் இது.

ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக் கொண்ட வியாபாரப் பங்கீடு மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் அரங்கேறும். எனவே உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. 2021ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.