சென்னை: கல்குவாரி முறைகேடு தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி வீடுகளில் கர்நாடகா போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க முன்னாள் அமைச்சரும்,  திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவருமான பொங்கலூர் பழனிசாமி கோவை பீளமேட்டில் வசித்து வருகிறார். இவரது பெயரில், கர்நாடக மாநிலத்தில் அதிகளவில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு கற்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இவர் நடத்தி வரும் கல்குவாரிகள், அரசின் விதியை மீறி செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து கர்நாடக மாநில போலீசார் அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று கோவையில் உள்ள  அவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்னர்.

முன்னதாக பொங்கலூர் பழனிசாமி வீடுகளில்  சோதனை மேற்கொள்ள கர்நாடக காவல்துறை சார்பில் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு அனுமதி பெற்றப்பட்டது.  இதையடுத்து கர்நாடக மாநில போலீசார் 15 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை கோர்ட்டு ஆர்டருடன் கோவை  ராமநாதபுரம் கிருஷ்ணா வீதியில் உள்ள பொங்கலூர் பழனிசாமியின் வீட்டிற்கு சென்று  சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது கல்குவாரி சம்பந்தமாக ஏதாவது ஆவணங்கள் இருக்கிறதா என்பதையும் பார்த்தனர். இந்த வீட்டில் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் பாரி வசித்து வருகிறார். இவர் தி.மு.க.வில் மாநில விளையாட்டு அணி துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இதேபோல் பீளமேட்டில் உள்ள பொங்கலூர் பழனிசாமியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்லூரியிலும் கர்நாடக போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீட்டில் கர்நாடக போலீசார் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.