சென்னை:
பள்ளிகளில் உள்ள கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக கண்காணிப்பாளர்கள் நியமன செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை நெல்லையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான சாஃப்டர் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 4 மாணவர்கள் மருந்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக சாஃப்டர் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியர் ஞானசெல்வி மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவில், மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும் உறுதித்தன்மை இல்லாத கட்டடங்கள் இருப்பின் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்டோர் அடங்கிய குழு பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.